Home

above-article

சிவமயம் & இராமாயணம் வீடு
முகவுரை

கோட்டையூர் திரு இராம. வீர. இராமசாமி செட்டியார் வீடு.

இந்திய கலாசாரத்தில் இந்து மதம் ஒரு முக்கியமான அங்கம் வகுப்பதை மதம் மற்றும் மொழி ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலானவர்கள் ஒத்துக்கொண்டும் கைப்பட எழுதியும் பதிப்பித்து வைத்திருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. மொழி கலாசாரத்தில் தமிழ் மொழி தொன்மை வாய்ந்தது என்பதும், திருமூலர் திருவாக்கினால் ”என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே” என்பதில் இருந்தும் தமிழ் மொழி முதன்மை வகிக்கிறது என்பதை அறிவோமாக. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தமிழ் மொழியில் வடிக்கப்பட்ட எத்தனையோ காவியங்களில் இரு பெரும் காவியமாகத் திகழ்வது இராமாயணமும், மகாபாரதமும். இதில் மிகச் சிறப்புப் பெற்றது இராமாயண கதை.

இராமாயணம் வீட்டில் இராமாயணம் படிக்கத் தொடங்கியது எப்படி

கோட்டையூர் திரு இராம. வீர. இராமசாமி செட்டியார் அவர்கள் இளவயது காலம் தொட்டே இறைச் சிந்தனையோ இறை நம்பிக்கையோ அற்றவர்களாக ஒரு நாத்திகவாதியாக வாழ்ந்து வந்தார்கள். திருமதி லட்சுமி ஆச்சி அவர்களைக் கைப்பிடித்து மணவாழ்க்கை தொடர்ந்தபோதும் அன்னாரது நாத்திகத் தன்மை மாறவில்லை. காலங்கள் கடந்துகொண்டே இருந்தது. திருமணத்திற்குப் பிறகு சுமார் இருபது ஆண்டு காலங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் தவித்து வந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் கோட்டையூரில் இவர்கள் வீட்டில் குடியிருந்த நத்தம் என்ற ஊரை பிறப்பிடமாகக் கொண்ட பெரியசாமி கொத்தனார் என்பவர் பிழைப்புக்காகக் கோட்டையூர் வந்து இவர்கள் வீட்டில் குடியிருந்தார். பெரியசாமி கொத்தனார் இறை நம்பிக்கையும் இறையருளும் கொண்டவர், தண்ணீரில் திரி போட்டு அதில் விளக்கேற்றி கூடியிருக்கும் கூட்டத்தில் பெயர் சொல்லி அழைத்து அவர்களுக்குக்குறி சொல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்தவராக இருந்தார். இப்படிக் குறிசொல்லிக்கொண்டிருக்கும் காலத்தில் 1945-ம் வருடம் ஒரு நாள் குறி சொல்லிக்கொண்டிருக்கும்போது திடீரென இராமசாமி இங்கே வா என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்ட இராமசாமி செட்டியார் பெரியசாமி கொத்தனாரின் அருள் வாக்கைக் கேட்க அருகே சென்றார். இராமசாமி உனக்குள்ளே வெகு காலமாக மனக்குறை ஒன்று இருக்கிறது உன் வீட்டிலே நீ இராமாயணம் படித்தாயானால் அந்தக் குறை நீங்கும் என்றார்.

அதுவரை இறை நம்பிக்கையே சற்றும் இல்லாத செட்டியார் அவர்கள் குறி சொன்னவரிடம் எனக்கு ஒன்றுமே தெரியாது என்னிடம் அது சம்பந்தமான புத்தகங்களோ வழிமுறைகளோ ஒன்றும் தெரியாமல் எப்படிப் படிப்பது என்று வினவினார்கள். அதற்கு குறி சொல்பவர் நீ மனதாரப் படிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டால் போதும் மற்றவை எல்லாம் தானாக நடக்கும் என்றார். தொடர்ந்து செட்டியாரவர்களும் இராமாயணம் படிப்பதாக ஒத்துக்கொண்டார்கள். உடனே குறி சொல்பவர் இராமாயணம் படிப்பதற்கு முன்பாக இராமேஸ்வரம் சென்று சுவாமி தரிசனம் முடித்த பிறகு வந்து தொடங்கு என்றும் தொடர்ந்து செட்டியாரவர்கள் பெண்டு பிள்ளைகள் புழங்குகிற வீட்டில் எங்கு வைத்துப் படிப்பது என்று கேட்டதற்கு நான் வந்து காட்சி தந்து இடத்தை உறுதிப்படுத்துவேன் என்றும் அந்த இடத்தை இராமாயணம் படிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அருள் வாக்குக் கிடைத்தது
அதன்படி ஒத்துக்கொண்டு இராமசாமி செட்டியார் அவர்கள் வெகு சீக்கிரமாகவே தம்பதி சமேதராய் இராமேஸ்வரம் சென்று சுவாமி தரிசனம் முடித்துத் திரும்பினார்கள். திரும்பி வந்தவுடன் இராமாயணம் படிக்க உகந்த மாதம் எது என்று பெரியசாமி கொத்தனாரையே கேட்க அவரும் புரட்டாசி மாதம் படிக்கலாம் என்று சொல்லியனுப்பினார்.

புரட்டாசி மாதம் முதல் நாளன்று வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு மாதமும் பிறந்துவிட்டது இராமாயணம் படிக்கலாம் என்று முடிவுசெய்தோம் இதுவரை இராமாயண புத்தகமோ படங்களோ கிடைக்கவில்லையே என்று மனக்கிலேசத்தொடு யோசித்துக்கொண்டு இருக்கையில் ஒருவர் கையில் புத்தகங்களோடு வந்து உங்கள் வீட்டில் இராமாயணம் படிப்பதாகக் கேள்விப்பட்டேன் இந்தப் புத்தகங்களை வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டுச்செல்ல அன்றுதினமே வேறு ஒருவர் வந்து சுவாமி படங்களையும் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். மலைத்துப்போன செட்டியாரவர்களும் ஒரு நல்ல நாள் பார்த்து வளவுக்குள் குபேர மூலையில் கிழக்குமுகம் பார்த்து அந்த சுவாமி படத்தை பிரதிட்டை பண்ணி இராமாயண காதையை படிக்க ஆரம்பித்தார்கள். முதல் நாள் இராமாயணம் படிக்க ஆரம்பித்துப் படித்துக்கொண்டிருக்கையில் ஒரு நல்ல பாம்பு வந்து படமெடுத்து ஆடிக்கொண்டே காட்சி தந்துவிட்டுச் சில நொடிகளிலேயே யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிக்காமல் வந்த வழியே சென்றுவிட்டது. மகிழ்ச்சிப் பெருக்கினால் செட்டியாரவர்களும் மற்றவர்களும் இறையருளை உணரத்தொடங்கினார்கள். நல்லபடியாக அந்த முதல் வருடம் இராமாயணம் படித்து முடித்தார்கள்.
தொடர்ந்து இறைவன் காட்சி தந்த இடத்தையே இன்றுவரை இராமாயணம் படிக்க உபயோகப் படுத்துவதுடன் ஆகம முறைப்படி அந்த இடம் தட்டிகள் வைத்து அடைத்து சீர்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இறையருளால் இராமாயணம் படித்த மறுவருடம் இராமசாமி செட்டியார் அவர்களுக்கு ஆண் வாரிசாக வீரப்ப செட்டியார் அவர்கள் பிறந்து இராமாயணம் படித்ததன் பலனை அறியச்செய்தார்கள். அதுமுதல் இராமசாமி செட்டியாரவர்களும் பக்திமேலோங்க அடுத்தடுத்த ஆண்டுகளில் இராமாயணம் படிக்கும்போது படிக்கின்ற காட்சிகளுக்குதகுந்தாற்போல் ஐம்பொன் மற்றும் வெள்ளியினால் சிலைகள் செய்துவைத்து நிவேதனங்கள் படைத்து வழிபட்டுவரலானார்கள்.

இராமர் பிறப்பு: தொட்டில், குழந்தை சிலை, கிலுகிலுப்பை
குருகுல வாசம்: வில், அம்பு, சங்கு சக்கரம்
சீதா கல்யாணம்: தாலி
வனவாசம்: இராமர் பாதுகை
அரண்ய காண்டம்: மாய மான், மாரீசன், ஜடாயு
சுந்தர காண்டம்: கணையாழி
யுத்தகாண்டம்: கருடாழ்வார் சிலை மற்றும் விபீடணன் கும்பகர்ணனுக்கு பெருமாள் அவதாரத்தைச் சொல்லுமுகமாக பெருமாளின் நரசிம்மாவதாரச்சிலை, யுத்த பூமியில் பிரம்மாஸ்திரத்தினால் கட்டுண்ட அனைவரையும் மீட்க சஞ்சீவி மலை
ராமர் பட்டாபிஷேகம்: கிரீடம், மங்கலத் தோரணங்கள்

மேற்கண்டவாறு சிலா வடிவங்களுடன் வழிபடுவதோடு இராமாயண காதையை யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அக்கதையைக் கேட்பதற்கு நிச்சயமாக ஆஞ்சநேயர் அந்த இடத்தில் இருப்பார் என்ற ஐதீகத்தில் ஒரு ஆஞ்சநேயர் சிலை கதை கேட்பதுபோல் அமைக்கப்பட்டிருப்பது மிக விசேஷமான ஒன்று.பட்டாபிஷேகத்தன்று மதியம் முருகனுக்கு வேல் பூசை போட்டு மெய்யன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு இராமர் பட்டாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தப்பெற்று இராமாயணம் சுபமாகும். பட்டாபிஷேகம் முடிந்த மறுநாள் பட்டாபிஷேகத்திற்கு வந்த அனைவருக்கும் வரிசைகள் கொடுத்தும், ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தியும் விடைகொடுக்கும் படலத்தோடு இராமாயணம் நிறைவு பெறுகிறது.

21 நாட்கள் முதல் 27 நாட்கள் வரை படிக்கப்படும் இராமாயணத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிவேத்யம் பண்ணிப் படைத்து வழிபாடு நடக்கும். இதை நம்பிக்கையோடு கேட்பவர்கள் அவரவர்க்கு ஏற்றமாதிரி வேண்டுதலோடு வந்து அந்தந்த நாட்களில் உபயங்கள் செய்து தரிசனம் செய்ய அவர்கள் வேண்டிய எல்லாம் ஒவ்வொருவருக்கும் இன்றுவரை நடந்து வருகிறது என்பது கண்கூடாகக் கண்ட சிறப்பு.

  • *குழந்தை பாக்கியம் வேண்டுவோர் முதல் நாள் இராமர் பிறப்பு அன்று வேண்டிக்கொண்டு உபயம் செய்து வழிபட்டவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கிறது.
  • நன்றாகப் படிக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு குருகுல வாசம் படிக்கும் நாளில் உபயங்கள் செய்து வேண்டிக்கொண்டவர்களுக்கு நல்ல வித்தியாப்பியாசம் கிடைத்திருக்கிறது.
  • திருமணத் தடை விலக அல்லது சீக்கிரம் கல்யாணம் முடிய வேண்டும் என்று உபயம் செய்து வேண்டிக்கொண்டவர்களுக்கு அடுத்த வருடமே கல்யாணம் முடிந்திருக்கிறது.
  • வீட்டில் எப்போதும் நற்செய்திகள் இல்லறம் நலமுடன் நடப்பதற்கு சுந்தர காண்டத்தன்று உபயங்கள் செய்து வேண்டிக்கொண்டால் அனைத்து வெற்றிகளும் கிட்டும். சுந்தர காண்டம் படிப்பது முழு இராமாயணம் படிப்பதற்கு இணையானது
  • மருத்துவப் படலம் படிக்கிற நாளில் உபயம் செய்து நீடித்த ஆரோக்கியம் பெறலாம்.
  • பாரத்வாஜ விருந்து உபயம் செய்து வேண்டிக்கொள்ள வாழ்க்கை மற்றும் தொழில் வளம் பெருகும்.
  • பட்டாபிஷேகத்தன்று எல்லா விதமான உணவுப்பொருட்களும் உபயம் செய்ய அனைத்து விதமான பலன்களும் பெறுவது திண்ணம். இராமர் வனவாசம் முடிந்து பட்டினப்பிரவேசம் செய்தது போன்ற மகிழ்ச்சி எல்லோரது இல்லத்திலும் நிலவும் என்பதும் திண்ணம்.

வால்மீகி, கண்ணதாசன் போன்றவர்களைப்போல ஆதியில் நாத்திகவாதியாய் இருந்து பின்னாளில் ஆத்திகவாதியாய் மாறிப் புகழ்பெற்றதைப்போல் இராமசாமி செட்டியாரவர்களும் ஆதியில் நாத்திகவாதியாய் இருந்து பின்னாளில் மிகப்பெரும் ஆத்திகவாதியாகி அடைந்த பலன்கள் ஏராளம்.
தொடர்ந்து 70 ஆண்டு காலமாக இராமாயணகாதையைப் படித்துக்கொண்டுவருவதாலேயே இராமசாமி செட்டியார் அவர்கள் வீடு இராமாயணம் வீடு என்று புகழ் பெற்று அன்னாரது வம்சங்களும் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். நாமும் இந்தப் புண்ணிய கதையைக் கேட்பதுடன் பிறரையும் கேட்கச் செய்து நாம் அடையும் பேரருளை ஏனையோரும் அடையச் செய்து புண்ணியம் பெறுவோமாக. இந்த முகவுரையை எழுதுவதற்கு வாய்ப்பளித்த கோட்டையூர் திரு இராம. வீர. இராமசாமி செட்டியார் குடும்பத்தார்களுக்கு என் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்வதோடு எழுதுவதற்குண்டான விபரங்கள் அனைத்தும் தந்த அன்பு இளவல் இராம. வீர. அழகப்பன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இராமகாதையைப் படித்ததைப்போல் மகிழ்வோடு இந்த முகவுரையை நிறைவு செய்கிறேன்.

இராம நாமம் வாழ்க!!

அன்புடன்,
கவிஞர் கல்லல் நா. தியாகராஜன்.

below-article