1) தருகை நீண்ட தயரதன்தான் தரும்
இரு கை வேழத்து இராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட,
குருகை நாதன் குரை கழல் காப்பதே.
2)அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி,
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, ஆர் உயிர் காக்க ஏகி,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான்.
3)பொத்தகம், படிகமாலை, குண்டிகை, பொருள் சேர் ஞான
வித்தகம் தரித்த செங் கை விமலையை, அமலைதன்னை,
மொய்த்த கொந்து அளக பார முகிழ் முலைத் தவள மேனி
மைத் தகு கருங் கண் செவ் வாய் அணங்கினை, வணங்கல் செய்வாம்.
4)வெள்ளை கலையுடுத்தி வெள்ளி பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்
வெள்ளையரியாசனத்தில் அரசரோடு எனை
சரியாசனம் அமர்ந்த தாயே.
5)உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
6)நாடிய பொருள் கைகூடும்; ஞானமும் புகழும் உண்டாம்;
வீடு இயல் வழிஅது ஆக்கும்; வேரி அம் கமலை நோக்கும்;-
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய, வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே.
7)நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே –
இம்மையே இ’ராம’ என்று இரண்டு எழுத்தினால்.
8)வட கலை, தென் கலை, வடுகு, கன்னடம்,
இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்,
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே
9)வென்றி சேர் இலங்கையானை வென்ற மால் வீரம் ஓத
நின்ற ராமாயணத்தில் நிகழ்ந்திடு கதைகள் தம்மில்
ஒன்றினைப் படித்தோர் தாமும், உரைத்திடக் கேட்டோ ர் தாமும்,
‘நன்று இது’ என்றோர் தாமும், நரகம் அது எய்திடாரே.
10)இராகவன் கதையில், ஒரு கவிதன்னில் ஏக பாதத்தினை உரைப்போர்,
பராவ அரும் மலரோன் உலகினில், அவனும் பல் முறை வழுத்த, வீற்றிருந்து,
புராதன மறையும் அண்டர் பொன் பதமும் பொன்றும் நாள்அதனினும், பொன்றா
அரா அணை அமலன் உலகு எனும் பரம பதத்தினை அடைகுவர் அன்றே
11)இறு வரம்பில் ‘இராம’ என்றோர், உம்பர்
நிறுவர் என்பது நிச்சயம்; ஆதலால்,
மறு இல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம்
பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ?
12)அன்ன தானம், அகில நல் தானங்கள்,
கன்னி தானம், கபிலையின் தானமே,
சொன்ன தானப் பலன் எனச் சொல்லுவார்-
மன் இராம கதை மறவார்க்கு அரோ.
13)’ஆதி “அரி ஓம் நம” நராயணர் திருக்கதை அறிந்து, அனுதினம் பரவுவோர்,
நீதி அனுபோக நெறி நின்று, நெடுநாள் அதின் இறந்து, சகதண்டம் முழுதுக்கு
ஆதிபர்களாய்அரசுசெய்து,உளம்நினைத்தது கிடைத்து,அருள்பொறுத்து,முடிவில்
சோதி வடிவு ஆய், அழிவு இல் முத்தி பெறுவார்’ என உரைத்த, கருதித் தொகைகளே.
14)இனைய நல் காதை முழுதும் எழுதினோர், ஓதினோர், கற்றோர்,
அனையதுதன்னைச் சொல்வோர்க்கு அரும்பொருள் கொடுத்துக் கேட்டோர்,
கனை கடல் புடவி மீது காவலர்க்கு அரசு ஆய் வாழ்ந்து,
வினையம் அது அறுத்து, மேல் ஆம் விண்ணவன் பதத்தில் சேர்வார்.
15)நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற,
ஆரணக் கவிதை செய்தான், அறிந்த வான்மீகி என்பான்;
சீர் அணி சோழ நாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன்,
கார் அணி கொடையான், கம்பன், தமிழினால் கவிதை செய்தான்.
16)கரை செறி காண்டம் ஏழு, கதைகள் ஆயிரத்து எண்ணூறு,
பரவுறு சமரம் பத்து, படலம் நூற்றிருபத் தெட்டே;
உரைசெயும் விருத்தம் பன்னீராயிரத்து ஒருபத்தாறு;
வரம்மிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணூற்றாறே.